புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. கிரிக்கெட் போட்டியை விட நாடுதான் முக்கியம் எனவே உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யும் நோக்கத்தில் ICC இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள கருத்து பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால் அது பாகிஸ்தானுக்குத்தான் சாதகமாக சாதகமாக அமையும். எனவே உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நிச்சயம் விளையாட வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்று பாகிஸ்தானை இந்தியா வீழ்த்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.