இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது T20 போட்டியானது இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்ந போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

துவக்க மட்டையாளர்களாக, லோகேஷ் ராகுலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இதனையடுத்து லோகேஷ் ராகுல் 4 சிக்சர்களையும், 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து ஷிகர் தவான், ரிஷப் பாண்ட் இருவரும் சொற்பரன்களில் வெளியேறினர். பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் தோனி இணைந்து இருவரும் அதிரடியாக ஆடி பந்துகளை பறக்கவிட்டனர். விராட் 38 பந்துகளில் 72 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். தோனி 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 190 ரன்கள் எடுத்தது.

191 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி அபார சதம் அடித்தார். இவரின் அதிரடி ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.