எத்தியோப்பிய விமான விபத்தில் ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக தப்பித்த நிலையில் அதற்கு இரண்டு நிமிடம் அவர் தாமதமாக வந்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது.

தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

இதில் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க ஆந்திராவை சேர்ந்த நுகவராப்பு மனிஷா என்பவர் சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே கூட்டத்தில் பங்கேற்க இருந்த அந்தோனிஸ் மாவ்ரோபவுலாஸ் என்பவர் 2 நிமிடம் தாமதமாக வந்ததால் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் செல்ல இருந்த இவர், 2 நிமிடம் தாமதமாக வந்ததால் விமான நிலைய புறப்பாடு கேட் மூடப்பட்டுவிட்டது.

அவரை அனுமதிக்கவில்லை என்பதால் அவர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து விமான விபத்துக்கு பின்னர் அந்தோனிஸ் தனது பேஸ்புக்கில், சரியான நேரத்துக்குள் விமான நிலைய கேட்டுக்குள் செல்ல யாரும் எனக்கு உதவவில்லை. இதனால் பைத்தியமாக உணர்ந்தேன். ஆனால், அது எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார். விமானத்தின் டிக்கெட்டையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், என்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்ல இருந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. நீங்கள் மட்டும் தான் தப்பியிருக்கிறீர்கள் என்று கூறியதாக பதிவிட்டுள்ளார்.