இறைவனை நாம் நேருக்கு நேராக பார்க்க முடியாது.ஆகவேஅன்று உருவ வழிபாட்டிலே இறைவனை வழிபடலாமென ஆகமங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் . கருங்கல்லினாலும், உலோகங்களினாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை ஆதி மூலத்தில் வைத்து வழிபடலாம் என்பது ஆகம மரபு. இதிலும் கருங்கல் விக்கிரகங்களே விசேடமானது. ஏனெனில் சிவாச்சாரியார்கள் செய்யும் அபிசேகங்கள் எல்லாம் கருங்கல்லில் ஊறி விக்கிரகத்தின் அடியிலுள்ள இயந்திரத்தில் சேர்கின்றன.அத்துடன் கருங்கல்லில் ஆகர்ண சக்தியும் (ஈர்ப்புச் சக்தி) கூடுதலாக உள்ளது.

அத்துடன் சிவாச்சாரியார்கள் சொல்லும் வேத மந்திரங்களின் ஓசைகள் யாவற்றையும் கருங்கல் இழுத்துக் கிரகித்து இயந்திரத்துக்குக் கொடுக்கிறது. இதன்படி அந்த இயந்திரம் இறைவடிவாகி கருங்கல் மூலம் மக்களுக்கு அனுக்கிரகம் பெய்கின்றது. ஆகவே கருங்கல் விக்கிரகத்தை ஆதி மூலத்தில் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது விதி.

உலோகங்களினால் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு அபிஷேக நீரை இழுக்கவோ, மந்திர ஒலியைக் கிரகிக்கக் கூடிய சக்தியோ குறைவு. ஆனால் அந்த விக்கிரகங்களை வெளிப்பார்வையாய்ப் பார்த்து வழிபடுவதற்கு சிவாச்சாரியார்கள் மூலமூர்த்தியின் பிரதியை சொரூபமாக இயந்திரங்கள் மூலம் ஆக்கிக் கொள்ளுகிறார்கள். ஆகவே அவற்றையும் வழிபடலாம் என்பது விதியாகும்.

இதனை கும்பாபிசேகம், குடமுழுக்கு குட நன்னீராட்டு, அல்லது பெருஞ்சாந்தி என்று ம் கூறுவார். கும்பாபிசேகம் ஆவர்த்தனப்பிரதிஷ்டை, அனாவர்த்தனப் பிரதிஷ்டை, புனராவர்த்தனப் பிரதிஷ்டை, அந்தரீகப் பிரதிஷ்டை என நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது .

ஆவர்த்தனப்பிரதிஷ்டை- கோவில் இல்லாத ஊரில் புதிதாகக் கோயில் கட்டி பிரதிஷ்டிப்பது.

அனாவர்த்தனப் பிரதிஷ்டை – கோயில் இருந்தும், பூசை செய்தும் அனேக நாட்களுக்கு மூடப்பட்டிருந்து பின்னர் கோயிலைத் துப்பரவு செய்து பிரதிஷ்டிப்பது..

புனராவர்த்தனப் பிரதிஷ்டை – கோயிலில் பூசை நடந்து கொண்டிருக்கும்போது கட்டிடத்தில் வெடிப்பு, உடைவு, அஷ்டபந்தனம் பழுதடைதல் போன்றவைகள் ஏற்பட்டால் அவைகளைத் திருத்திப் பின் பிரதிஷ்டை செய்தல்.

அந்தரீகப் பிரதிஷ்டை – ஆலயத்தில் மரணம் ஏற்பட்டால் ,ஆசூசம் உள்ளவர்கள் உட்பிரவேசித்தால், நாய் உட்சென்றால் உடனுக்குடன் செய்ய வேண்டிய கிரியை இது. இதற்கு நாள் பார்க்க வேண்டியதில்லை . மற்றைய பிரதிஷ்டைகளுக்கு நல்லநாள் பார்த்து செய்ய வேண்டும்.

இதைத் தவிர்த்துப் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தால் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டியது ஆகமங்களில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.அதுவும் நடைபெறாவிட்டால் விக்கிரகத்தில் இருக்கும் இறையருள் ஆலயத்திலிருக்கும் தலவிருட்சத்திலிருந்து மக்களுக்கு மூன்று வருடங்களுக்கு அனுக்கிரகம் செய்யும்.அதிலும் கும்பாபிஷேகம் நடைபெறாவிட்டால் ஆகாயத்தில் கிச்சிலிப் பட்சியாக இருந்து அனுக்கிரகம் செய்யும்.

Sindinga9 shop