13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது தாய் பற்றி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளான்க் செக்குகளில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.

வாழ்நாளில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதைப் பொருளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. உங்களின் முடிவுகளை ஏற்காததால் எங்கள் வீட்டிலேயே எங்களை டார்கெட் செய்வதற்கு நன்றி.

நான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அனைத்து பொய் புகார்களுக்காக நன்றி. ஒரு நாள் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னை பார்த்து பெருமைப்படுவீர்கள் என்று சங்கீதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சங்கீதாவின் ட்வீட்டை பார்த்த கணவர் க்ரிஷ், நீ பட்ட கஷ்டம் எனக்கு தெரியும், உன் குடும்பத்திற்காக நீ செய்தது அனைத்தும் தெரியும், உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.. என்று தெரிவித்துள்ளார்.