இன்று 10-6-19 அஷ்டமி நாளை 11-6-19 நவமி.எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஆனாலும், ஏன் நல்ல காரியங்களைச் செய்ய அஷ்டமியையும், நவமியையும் ஒதுக்கி வைத்திருக்கிறோம். சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும் கூட, குழந்தை பிறப்பிற்கு கூட நாள், நட்சத்திரம் பார்த்து அஷ்டமியன்றும், நவமியன்றும் பிறக்காதவாறு அறுவை சிகிச்சை செய்கிறோம்.

‘கிருஷ்ணன் அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் தான், அவனது வாழ்வில் 14 வருடத்தைக் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது’ என்று நாமாகவே ஒரு பெரிய உண்மையைக் கண்டறிந்ததைப் போல சொல்லி வருகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அஷ்டமியையும், நவமியையும் தள்ளி வைத்ததன் பின்னால், அவர்களுடைய வானியல் அறிவு ஒளிந்திருக்கிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதைத் தான் ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே போல் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் சூரியனையும் சுற்றி வருவதைத் தான் ஒரு வருடம் என்கிறோம். சந்திரன், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். மாதம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதால் தான் அதற்கு, திங்கள் என்ற பெயர் உருவானது.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம். அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும். தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி!

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வலைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படுகின்ற அதிர்வலைகள் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

அந்த மாதிரியான அதிர்வலைகள் ஏற்படும் பொழுது, பூமியில் உள்ள எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும். அஷ்டமியில் ஆரம்பித்து நவமி கழிந்த பிறகே பூமி தனது இயல்பு நிலைக்குத் திரும்பும். அதன் பிறகு தான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளின் மனமும் நிலை பெரும். அதனால் அஷ்டமி அன்றும், நவமியன்றும் நவநாழிகை வரையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்