வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் சாமியாராக விஜயகுமாரும், அம்மா பகவானாக விஜயகுமாரின் மனைவி பத்மாவதியும் இருந்து வருகின்றனர்.

கல்கி ஆசிரமத்திற்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும் ஆசிரமங்கள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அவரது மகன் கிருஷ்ணா நடத்திய நிறுவனம் மூலம் ஆசிரம பணம், மாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்டு வந்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இதனையடுத்து கடந்த 16ம் திகதியன்று கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 90 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பணம் மற்றும் தங்கம், வைரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

500 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களின் பாஸ்போர்ட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Sindinga9 shop