மெக்சிகோவில் போதைப்பொருட்கள் கடத்தும் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தப்பிய 13 வயது சிறுவன், 23 கிலோ மீற்றர் நடந்து சென்று தனது குடும்பத்தினரை காப்பாற்ற உதவி கோரிய உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மெக்சிகோவின் சொனோரா பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் தங்களது 14 குழந்தைகளுடன் 3 காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பேவிஸ்ப் காட்டுப்பகுதியில் அவர்களை மர்ம கும்பல் வழி மறைத்தது. சுதாரித்துக் கொள்வதற்குள் மர்ம கும்பல் சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த கொலைவெறித் தாக்குதலில் தப்பிய 13 வயது சிறுவன், மேலும் 7 குழந்தைகளுடன் புதரில் பதுங்கி மறைந்திருந்தான்.

பின்னர் காட்டுப்பகுதியிலிருந்து நகர் பகுதிக்கு 6 மணி நேரம் நடந்தே சென்று உதவி நாடியுள்ளான்.

இதையடுத்து அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டனர். இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள பொலிசார், கடத்தல் கும்பல் தங்கள் எதிரிகளை தாக்குவதாக நினைத்து தவறான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் வருத்தத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், சொனோரா பகுதி மக்கள் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல்களுக்கு எதிரானவர்கள் என்பதால் இவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து மெக்சிகோ அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் உதவி செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sindinga9 shop