நம் வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது நம் ஜாதக கட்டத்தில் உள்ள நவகிரகங்கள் தான். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நவக்கிரகங்களை வழிபடாமல் இருக்கமாட்டோம். இப்படிப்பட்ட கிரகங்களை நாம் சுற்றி வரும்போது அந்த 9 கிரகங்களுக்கு உண்டான மந்திரங்களை ஒரு முறை கூறி வழிபடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் கூடுதலாகதான் இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. நம் தாய்மொழியான தமிழில் இந்த மந்திரங்களை கூறும் போது அதில் நமக்கு கிடைக்கும் நிம்மதியை அடுத்தவர்கள் சொல்வதின் மூலம் உங்களால் உணர முடியாது. நவகிரகங்களை வழிபடும் போது உங்கள் வாயால் அந்த மந்திரத்தை உச்சரிக்கும் நேரத்தில் தான் உணர முடியும். நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவர்களின் ஸ்லோகங்கள் பின்வருமாறு. சூரியன் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி சூரியா போற்றி, சுதந்திரா போற்றி வீரியா போற்றி, வினைகள் களைவாய். சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி, திருவருள் தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!

செவ்வாய் (அங்காரகன்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு (வியாழன்) குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய் பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய். சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய் வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!

சனி பகவான் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா. ராகு பகவான் அரவெனும் ராகு அய்யனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி ராகுக்கனியே ரம்யா போற்றி! கேது பகவான் கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி! இப்படி நவகிரகங்களின் ஸ்லோகங்களைச் சொல்லி அவர்களை வழிபடும்போது நமக்கு கிடைக்கும் பலன் முழுமை பெறும். கிரகங்களின் பலன்கள் 1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்கும். 2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும். 3. செவ்வாயை வழிபடுவதால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும். 4. புதனை வழிபட்டால் நல்ல புத்தியும், அறிவாற்றலும் அதிகமாகும். 5. குரு பகவானை வணங்கினால் செல்வ செழிப்பும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். 6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை அமையும் யோகம் உண்டாகும். 7. சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும். 8. ராகுவை வணங்கினால் பயணத்தில் நன்மை கிடைக்கும். 9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகங்களை வழிபடும் போது நமக்கு ஏற்படும் பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.

Sindinga9 shop