செவ்வாய் பகவான் வீரத்தின் அதிபதி. செவ்வாய் வெறும் வாய், செவ்வாய் கிழமைகளில் நல்ல காரியம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் செவ்வாய் பகவான் பல அற்புத யோகங்களை தரக்கூடியவர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. செவ்வாய் பகவான்தான் வீடு வாங்கும் யோகத்தை தருவார். அரச யோகத்தையும், அரசாங்க வேலை கிடைக்கும் யோகத்தையும் கொடுப்பார். செவ்வாய் தோஷம் பற்றி பயப்படுபவர்கள் செவ்வாயினால் ஏற்படும் யோகத்தைப் பற்றி படியுங்கள்.

நவகிரகங்களில் சூரியனுக்குஅடுத்தபடியாக பராக்கிரமம் மிக்கவராக, செயல் ஆற்றல் உள்ளவராகக் கருதப்படுபவர் செவ்வாய் பகவான். பூர்வீகச் சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றைத் தீர்மானிப்பவர் செவ்வாய். வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.

செவ்வாய் பகவானால் பல மங்கள யோகங்கள் ஏற்படுகின்றன. சந்திர மங்கள யோகம், ருசக யோகம், குரு மங்கள யோகம், பிருகு மங்கள யோகம் என பல மங்கள யோகங்கள் ஏற்படுகின்றன. இந்த யோகங்களினால் தைரியம் அதிகமாகும். தன்னம்பிக்கையும் துணிவும் கூடி வரும். சொத்துக்கள் வாங்கலாம். செவ்வாய் பகவானால் சொத்து சுகத்தோடு வண்டி வாகன யோகமும் அமையும் மன நிம்மதியும் ஏற்படும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். அரச பதவிகள் தேடி வரும். எந்த இடத்தில் செவ்வாய் எந்த கிரகத்தோடு கூடியிருந்தால் என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் – பலன்கள்!
அழகான வீடு தரும் செவ்வாய் சுக்கிரன்
சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை. செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு பலவகையில் சொத்து சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. பூமி செவ்வாய் என்றால் அந்த நிலத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் சுக்கிரன். ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டியதும் மிக அவசியம். பிருகு என்றால் சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும்.

அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. ரத்த கிரகம் நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரகமாக இருப்பவர் செவ்வாய். இவர் பலமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் ரியல் எஸ்டேட், நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டடத் தொழில், சிவில் இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதால் ருசக யோகம் ஏற்படுகிறது. இவர்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பார்கள். ஆன்மிகம் மற்றும் தெய்வ நம்பிக்கையில் அசையாத உறுதி கொண்டவர்கள். இவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு பூமி யோகம் இயற்கையாகவே அமைந்திருக்கும். பூமி அல்லது நிலம் மூலம் பல்வேறு லாபங்கள் ஏற்படும்.

லக்னத்துக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்து, அந்த இடம் செவ்வாய்க்கு சொந்தவீடாகவோ, உச்ச வீடாகவோ இருப்பது சிறப்பு. செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகியவற்றிலும், உச்ச வீடான மகரத்திலும் இருந்தாலும் யோகம் உண்டாகும். செவ்வாய் இப்படி வலுக்கும்போது, சொந்த வீடு மனை, வண்டி வாகனங்கள் ஆகியன சேரும். மன தைரியம் தன்னம்பிக்கையோடு செயலாற்ற முடியும். வெற்றிகள் தேடி வரும்.

சொத்து சேர்க்கும் சந்திரமங்கள யோகம் அற்புதமான யோகமாகும். மனோகாரகன் சந்திரனுடன் தைரியகாரகன் செவ்வாய் இணைவதால் மனோபலம் கூடும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சொத்துகள் சேரும் லாபங்கள் தேடி வரும். செவ்வாய் சந்திரனுடன் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் கூட்டணி அமைத்து வலுத்திருக்கும்போது, சந்திர மங்கள யோகம் உண்டாகும்.குரு பகவான் மங்கள காரகனான செவ்வாய் உடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறது. இந்த யோகத்தினால் சாதனை நாயகனாக திகழ்வார்கள். குருவும் செவ்வாயும் ராஜ கிரகங்கள். இந்த கிரகங்களின் கூட்டணியால் அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு இணையான பதவியும் பொறுப்பும் கிடைக்கும். குரு செவ்வாய் உடன் இணைந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும் போது இந்த யோகம் உண்டாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவகிரக திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் புத்திர யோகம், பூமி பாக்யம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.

Sindinga9 shop