வெளிநாட்டில் வேலை செய்த கணவன் ஊருக்கு வந்து மனைவியை கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (33).

இவரும் கலைவாணி (28) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2 பேரும் கடந்த 26.11.2015 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமாகி 5 மாதங்கள் ஆன பிறகு, பாபு வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கலைவாணி கர்ப்பமடைந்தார். இதையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற அவர் மீண்டும் பாபுவின் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் பாபு, கலைவாணி வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இருப்பினும் அவர் வர மறுத்துவிட்டார். இதையடுத்து பாபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 11 மாதங்கள் ஆன பிறகு பாபு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலைவாணி வீட்டுக்கு சென்று, அவரை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 4.12.2016 அன்று தனது குழந்தைக்கு முதலாவது பிறந்தநாளை காலையில் கலைவாணியின் தாய் வீட்டிலும், மாலையில் பாபு வீட்டிலும் கொண்டாடினர்.

இருப்பினும் கலைவாணி பாபுவுடன் குடும்பம் நடத்தாமல் தனது தாய் வீட்டுக்கும், அவரது அக்காள் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.

இது தொடர்பாக கடந்த 5.12.2016 அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பாபு, கலைவாணியை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார்.

இதையடுத்து பொலிசார் பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sindinga9 shop