எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் ஒன்று உள்ளது.
அதுதான் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் ஆகும். இந்த ஆலயத்தில் வாஞ்சிநாத சுவாமி என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். வாழவந்த நாயகி என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு. ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை,

கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார். ‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் இறப்பவர்கள் கூட மூன்றேமுக்கால் நாழிகை பைரவ வேதனையை அனுபவித்தப் பிறகுதான், புண்ணிய கதியைப் பெறுகின்றனர். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் இறப்பவர்களுக்கு அந்த வேதனை கூட கிடையாது. மேலும் இந்த க்ஷேத்ரத்தில் மனிதர்கள், பிராணிகள், பறவைகள் என யார் இறந்தாலும், அவர்களின் வலது காது மேல் நோக்கிய நிலையிலேயே இருக்கும். இதற்குக் காரணம், காசி க்ஷேத்ரத்திலும், காசிக்கு ஒப்பான ஸ்ரீ வாஞ்சியத்திலும், ஜீவன்களின் மரணத் தறுவாயில், ஸ்ரீ பரமேஸ்வரன், அந்த ஜீவன்களின் வலது காதில், பிறப்பறுக்கும் தாரக மந்திரமாகிய ஸ்ரீராம நாமத்தை உபதேக்கிறார் என்பது ஐதீகம்.

சந்தன மரத்தை தலமரமாக கொண்ட திருவாஞ்சியம் திருக்கோவில், கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கைக் கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனிச்சன்னிதியில் உள்ள எமதர்மராஜனை வழிபட்டு, பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும்.

அதன் பிறகு மூலவரான வாஞ்சிநாத சுவாமியையும், மங்களாம்பிகைகளையும் தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னிதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வெண்ணெய் விநாயகர், ஜேஷ்டாதேவி, பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள். இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன் கங்கா தீர்த்தத்தின் நீராடிய பலனைத் தந்தருளுகிறாள்.

தட்சனின் யாகத்திற்கு சென்றதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன் தனது ஒளியை இழந்தான். பின்னர் இந்த தீர்த்தத்தில் நீராடிதான் தனது ஒளியைப் பெற்றான் என்பது தல வரலாறு.

இத்தலத்தில் சிறப்பம்சமாக விளங்கும் யமதர்மராஜன் சன்னதி. தனி கோபுரத்தின் கீழ் இச்சன்னதி அமையப் பெற்றுள்ளது. இப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். யமதர்மராஜனின் அருகில், நம் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த யமதர்மராஜன் சன்னதியில் ஒரு பழக்கம் உள்ளது. நாம் அர்ச்சனை செய்யும் எந்த பொருளையும் சரி, திருநீறு பிரசாதங்கள் என்று எதையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது. இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார். 108 முறை தாமரை மலர்களைக் கொண்டு இத்தலத்தில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை அர்ச்சனை செய்து வழிபட எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.

Sindinga9 shop